யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம் கார்த்திகை மாதம் 12ஆம் திகதி கடந்த புதன்கிழமை வவுனியா திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய மீளாய்வும் வருகின்ற வருடத்துக்கான திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றன.
அதன் அடிப்படையில் கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஆவணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும், வேதாகமமும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் வருகின்ற வருட தவக்காலத்தில் நான்கு மறைமாவட்டங்களையும் சேர்ந்த குருக்களுக்கான தவக்கால தியானமொன்றை மன்னார் மடு திருத்தலத்தில் நடத்துதல், நான்கு தமிழ் மறைமாவட்டங்களும் உள்ளடங்கிய உயர் மறைமாவட்டத்தை ஏற்படுத்தல், நமது பிரதேசங்களில் விசுவாசத்துக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்களை விசுவாச வீரர்களென அறிவிக்க வேண்டிய முயற்சிகளை முன்னெடுத்தல் போன்றவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் யாழ்ப்பாண, மன்னார் மறைமாவட்ட ஆயர்கள், மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர்கள் கலந்துகொண்டனர்.

