திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட சலேசிய டொன் பொஸ்கோ சபை அருட்சகோதரி மரிய ட்ரொங்காத்தி அவர்களின் புனித நிலைக்கான நன்றித்திருப்பலி ஐப்பசி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்றது.
சபையின் இலங்கைக்கான பிரதிநிதி அருட்சகோதரி லாசர் மரிய நிர்மலா அவர்களின் வழிநடத்தலில் சபையின் யாழ்ப்பாணம், உரும்பிராய், மணியந்தோட்டம் மற்றும் ஓமந்தை கன்னியர் மட அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்ற திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து கொண்டனர்.
1883ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் திகதி இத்தாலியின் கோல்கி நகரின் கொர்டேனோ எனும் ஊரில் பிறந்த அருட்சகோதரி மரிய ட்ரொங்காத்தி அவர்கள் 1905ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர்கள் சபையில் இணைந்து, துறவறப்பயிற்சியினை மேற்கொண்டார்.
தொடர்ந்து 1908ஆம் ஆண்டு தனது முதல் வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 1922ஆம் ஆண்டு எக்குவடோருக்கு மறை பரப்;புப்பணியாளராக சென்று, அமேசான் காட்டில் வாழும் பழங்குடி மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இறைபணியாற்றினர்.
மருத்துவ, கல்வி, மற்றும் ஆன்மீகப் பணிகள் ஊடாக மக்களுக்கு இரக்கத்தையும், அன்பையும் பொழிந்த புனித மரிய ட்ரொங்காத்தி 1969ஆம் ஆண்டு, ஆவணி மாதம் 25ஆம் திகதி விமான விபத்தில் உயிரிழந்தார்.
இவர் 2012ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் அருளாளர் பட்டம்பெற்று 2025ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் புனிதர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

