மன்னார் மாவட்ட கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான உண்மைக்கு புறம்பான செய்திகளை தெளிவுபடுத்தி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் பிரஜகள் குழு தலைவர் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட ஊடக சந்திப்பு 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் சர்வமத குழு, பொது அமைப்புக்கள் மற்றும் போராட்ட குழுக்களுடளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் நடைபெற்ற விபரங்களை விபரித்து ஜனாதிபதியுடன் காற்றாலை அமைத்தல் மற்றும் கனியமண் அகழ்வு தொடர்பாக ஊடகங்கள் குறிப்பிடும் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் தான் மேற்கொள்ளவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆயர் அவர்கள் தான் ஜனாதிபதியை சந்தித்து காற்றாலை தொடர்பான பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்ததாகவும் அதன்போது 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதே அரசின் நிலைப்பாடென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜனாதிபதி அவர்கள் மன்னாரில் கனிய மணல் அகழ்வு முற்றாக இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் 14 காற்றாலைகளையும் மக்கள் அனுமதித்தால் எந்த ஒரு நிறுவனமும் இப்பகுதியில் கனிய மணல் அகழ்வு மற்றும் மேலதிக காற்றாலை அமைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு தான் அனுமதிக்கப் போவதில்லையெனவும் இதற்கு அமைச்சரவை ஊடாக உறுதிமொழி வழங்குவதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக மன்னார் மக்களுடனான சந்திப்பின் பின்னரே இதற்கான நடவடிக்கையை எடுக்கலாமென தான் குறிப்பிட்டதாக தொரிவித்த ஆயர் அவர்கள் இது தொடர்பாக எவ்வித ஆவணத்திலோ, ஒப்பந்தத்திலோ தான் கையொப்பமிடவில்லை என்பதனையும் தெளிவுபடுத்தினார்.