யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சேனை மாநாடு ஐப்பசி மாதம் 11,12ஆம் திகதிகளில் தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
கொமிற்சிய ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இம்மாநாட்டை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்புரைகள் நடைபெற்றன. இவ்வுரைகளை சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள் “புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகம்” என்னும் தலைப்பிலும், சகோதரி ஜெயந்தி தியானமுத்து அவர்கள் “சேவை மனப்பான்மையும் நோக்கமும்” என்னும் தலைப்பிலும், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ரமேஸ் அவர்கள் “மரியாளும் மரியாயின் சேனையும்” என்னும் தலைப்பிலும், சகோதரி புளோரன்ஸ் ரஞ்சினி அவர்கள் “சேனை அப்போஸ்தலத்தின் அடிப்படை கொள்கைகள்” என்னும் தலைப்பிலும், சகோதரர் இராஜேந்திரம் தங்கராஜா அவர்கள் அலுவலர்களின்’ கடமைகள், சேனை ஊழியங்கள் என்னும் தலைப்பிலும் வழங்கியிருந்தார்கள்.
தொடர்ந்து கலந்துரையாடல்கள், அறிக்கை சமர்ப்பித்தல், திருமணித்தியாலம், என்பன நடைபெற்றதுடன் ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் இம்மாநாடு நிறைவடைந்தது.
இம்மாநாட்டில் யாழ் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலிருந்தும் 270 வரையான மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றினர்.