மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கெதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், கத்தோலிக்க மதகுருக்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்தும் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த மாபெரும் பொது முடக்கமும் பேரணியும் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்க அதிபர் நம்பிக்கை அளித்துள்ளதாகவும் சாதகமான பதில் கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அருட்தந்தை மார்க்கஸ் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டத்தில் தென் இலங்கை, யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக கத்தோலிக்க, பௌத்த, இந்து மதத்தலைவர்கள், சமூக செயற்பாட்டளார்கள், பொதுமக்களென பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.