இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், செம்மணி மனித புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் புரட்டாதி மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி ஜப்பசி மாதம் 01ஆம் திகதி வரை யாழ். செம்மணி பகுதியில் நடைபெற்றது.
இப்போராட்டத்தின் இறுதிநாளன்று செம்மணி அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியது.
அத்துடன் சர்வதேச சிறுவர் தினமாகிய அன்று இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி மக்கள் தீப்பங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள அறிக்கை வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து, அண்மையில் இலங்கை அரசாங்கத்தால் ஐ.நாவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.