கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
13ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநரும் திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநருமான அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
நற்கருணைவிழா திருப்பலி நிறைவில் கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் திருமறைக்கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை ஜெயசேகரம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
கனடா திருமறைக்கலாமன்ற தலைவர் திரு. யசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்கள் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், கனடா, ரொறன்ரோ, மிசிஸ்ஸாகா புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியக பரிபாலகர் அருட்தந்தை கனீசியஸ் ராஜ், அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ், அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன், மன்ற அங்கத்தவர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணிக்கு திருவிழா திருப்பலி இடம்பெற்றதுடன் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன. இவ்வழிபாடுகளில் ஏராளமான இறைமக்கள் கலந்து செபித்தனர்.