மட்டக்களப்பு மறைமாவட்டம் ஆயித்தியமலை புனித சதாசகாய அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை வின்சென்ட் ஜெரிஸ்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி சனிக்கிழமை புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மற்றும் செங்கலடி புனித நிக்லஸ் ஆலயத்திலிருந்து அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரையும் தொடர்ந்து நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.
திருவிழா திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டதுடன் மன்னார், புத்தளம், களுத்துறை பிரதேசங்களை சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.
இத்திருத்தலம் அருட்தந்தை ஜோர்ஜ் வம்பேக் அவர்களால் 1954ஆம் ஆண்டு சதாசகாய அன்னையின் படமொன்றை வைத்து ஓலைக்குடிசை ஆலயமாக ஆரம்பிக்கப்பட்டதுடன் இது சதாசகாய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் முதல் ஆலயம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.