யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை வவுனியா இறம்பைகுளம் திருக்குடும்ப கன்னியர் மட மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ள வத்திக்கான் திருவழிபாட்டு ஆணையத்தின் தலைவர் கருதினால் ரோச் அவர்களுடனான வடக்கு கிழக்கு மறைமாவட்ட குருக்கள் துறவிகளின் சந்திப்பு தொடர்பாகவும் மன்னார் தீவில் இடம்பெற்றுவரும் கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் பற்றியும் வடக்கு கிழக்கு மறைமாவட்டங்களின் பொது விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிபிள்ளை ஞானப்பிரகாசம், மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர்களும் பங்குபற்றியிருந்தனர்.
கருதினால் ரோச் அவர்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வடக்கு கிழக்கு மறைமாவட்டங்களின் குருக்கள் துறவிகளை மடுத்திருத்தலத்தில் சந்தித்து “கூட்டொருங்கியக்க திரு அவையின் ஒன்றிப்பின் அச்சாரம் நற்கருணை” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.