மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
6ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் திருப்பலி நிறைவில் அப்போஸ்தலிக்க ஆசீர்வாதத்தையும் இலத்தீன் மொழியில் வழங்கிவைத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் ஆசீரை இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் வைமன் குருஸ் அவர்கள் வழங்கிவைத்தார்.
திருவிழா திருப்பலியில் அனுராதபுர மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றொபேட் அந்த்ராடி, காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க, ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த ஆறு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்குபற்றி அன்னையின் ஆசீரை பெற்றனர்.