இலங்கை நிர்வாகத்தின் கீழ் உள்ள கச்சதீவு இலங்கைக்கே சொந்தம் இந்தியா இதனை ஓருபோதும் இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்கவில்லை. இதனை 1974ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போதைய இந்தியா நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் அவருடன் இணைந்த சில அரசியல்வாதிகளும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, கச்சதீவை இலங்கைக்குத்தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத்தவறென குறிப்பிடுவது தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லையென, யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆகஸ்ட் மாதம் கடந்த 06ஆம் திகதி “சூடுபிடிக்கும் கச்சதீவு விவகாரம்” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இவ்வறிக்கையில், இந்திய அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் அடிக்கடி கச்சதீவு விவகாரம் சூடு பிடிப்பது வழமையெனவும் தேர்தல் காலங்களிலும் மற்றும் எல்லைதாண்டி இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் வந்து இலங்கை மீனவர்களது வளங்களை சூறையாடி, வலைகளை சேதமாக்கும் போதும் இலங்கை கடற்படையால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படும் போதும் தமிழக முதல்வர் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதுபோல திரும்ப பெறுவதுதான் தமிழக மீனவர்களது பிரச்சினைக்குத்தீர்வு என்று கோசமிடுவது சர்வசாதாரணமான விடயமென குறிப்பிட்டு கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வரலாறு மற்றும் கச்சதீவு நடைமுறைகள் தொடர்பாக விரிவான விளக்கமொன்றினையும் வழங்கியுள்ளது.
1974ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஆணித்தரமாக கச்சதீவு இலங்கைக்கே சொந்தமெனவும் அதில் இந்தியா உரிமை கோண்டாடப்போவதில்லையெனவும் அறிவித்தமை கச்சதீவை இலங்கைக்குத்தாரை வார்த்து கொடுத்ததாக அமையாதென எடுத்துரைத்துள்ளதுடன் கச்சதீவு ஒருபோதும் இந்தியாவின் ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் கீழ் இருந்ததில்லையெனவும் இப்பின்ணணியில் கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுப்பது அல்லது மீளப்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லையெனவும் ஆயர் பேரருட்தந்தை தியோகுப்பிள்ளை அவர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்ல ஆவணங்களிலிருந்தும் யாழ் ஆயரின் நிர்வாகத்தின் கீழ் நெடுந்தீவு பங்குப்பதிவேடுகள் மற்றும் அங்குள்ளவர்களின் வாய்மொழி பாரம்பரியங்களிலிருந்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றாரெனவும் குறிப்பிட்டுள்ளது.