தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர் மறைக்கல்வி மாணவர்களால் பூச்செண்டு கொடுத்து ஆலயத்திற்குள் அழைத்துவரப்பட்டு திருப்பலி இடம்பெற்றது.
திருப்பலி நிறைவில் ஆலய மண்டபத்தில் முதியோர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றது.
இவ் ஒன்றுகூடலில், சுவக்கீன் அன்னம்மாள் மூத்தோர் சங்கம் உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மூத்தோர் சங்க தலைவர் மற்றும் யாழ். பிரதேச செயலக மூத்தோர் செயலக தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து முதியோரால் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் அவர்களுக்கான கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 75ற்கும் அதிகமான முதியோர் பங்குபற்றியிருந்தனர்.