முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடலும் கலைநிகழ்வும் யூலை மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது.
யூபிலி ஆண்டில் இயேசுவின் கரம்பற்றி முழுமனித ஆளுமை வளர்ச்சியை நேக்கிய பயணத்தில் இளையோரை வழிப்படுத்தும் நேக்கில் முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் லொ~hன் அவர்களின் தலைமையில் காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாடுகளும் கலைநிகழ்வுகளும் கருத்துரைகளும் கருத்தமர்வும் இடம்பெற்றன.
காலை கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நற்கருணை ஆராதனை, ஒப்புர அருட்சாதனம் என்பவற்றுடன் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் திருப்பலியும் இடம்பெற்றன.
தொடர்ந்து கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினரால் இளையோரின் திறன் வெளிப்பாட்டு வலுவூட்டல் கருத்தமர்வும் குழுச்செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு அன்று மாலை அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ்அரங்க நிகழ்வுகளில் இளையோரால் நடனம், பாடல்கள், வில்லுப்பாட்டு என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய கலைக்குழுவால் “மகிழ்வோடு கொடுத்திடு” என்னும் சிறப்பு நாடகமும் மேடையேற்றப்பட்டதுடன் மறைக்கோட்ட பங்கு இளையோரிடையே முன்னெடுக்கப்பட்ட துடுப்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றி கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 200ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம், யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோன் குருஸ், யாழ். மறைமாவட்ட கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் முல்லைத்தீவு றோ.க மகா வித்தியாலய அதிபர் திரு. நல்லையா அமிர்தநாதன் மற்றும் ஊடகவியலாளர் திரு. குமணன் கணபதிப்பிள்ளை ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.