யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு 19 நாட்களை தாண்டியும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் அப்பிரதேசத்தில் இன்னுமொரு பகுதியிலும் மனித புதைகுழி இருக்கலாம் எனும் சந்தேகத்தின்பேரில் அவ்விடத்திலும் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு ஒருவரின் ஆடையை ஒத்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அகழ்வுப்பணியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 37 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் இரண்டு சிறுவர்களுடையதெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவற்றுடன் சேர்ந்து யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பாடசாலை பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை, பாதணி, காப்பு வளையல்கள் போன்ற தடயப்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் சான்றுப்பொருள்களாக வைக்கப்பட்டுள்ளன.
யாழ். நீதிமன்ற நீதிவான் திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான திரு. ராஜ் சோமதேவாவின் தலைமையில் நடைபெற்றுவரும் இவ்அகழ்வுப் பணிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான வி. கே. நிரஞ்சன், ஞா. ரனித்தா மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் பங்குபற்றியுள்ளனர்.