யாழ். மறைமாவட்ட குருவும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வருமான அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு யூன் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை ஊர்காவற்துறையில் நடைபெற்றது.
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலயத்தில் அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
திருப்பலி நிறைவில் ஆலயத்திலிருந்து அருட்தந்தை அவர்கள் பாடசாலைக்கு நாதஸ்வர வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட அந்தோனியார் திருச்சொருபமும் திறந்துவைக்கப்பட்டு கல்லூரி பிரதான மண்டபத்தில் அருட்தந்தைக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்று அருட்தந்தையின் குருத்துவ யூபிலி தினத்தை நினைவுகூர்ந்து கல்லூரி சமுகத்தால் வெள்ளிவிழா மலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், குருக்கள், துறவிகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.