சமூகத்தில் ஊனமுற்றோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுவிழா யூன் மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது.
VAROD நிலைய இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா பம்பைமடு வரோட் அமையத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளை இணைத்து இவ்விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் தன்மைக்கேற்ப 9 பிரிவுகளாக நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் 175 போட்டிகள் இடம்பெற்றதுடன் 850 வரையான மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டியின் முதல்நாள் நிகழ்வுகளில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் மற்றும் ஓகான் மாற்றுத்திறனாளிகள் நிறுவன நிறுவுனர் திரு. சுப்ரமணியம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் இரண்டாம் நாள் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சபர்ஜா மற்றும் கிளறேசியன் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயசீலன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.