யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட காற்பந்தாட்ட போட்டி கடந்த 21, 22ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இலங்கையை சேர்ந்த 12 பாடசாலைகளின் அணிகள் பங்குபற்றிய இப்போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மோதிய நிலையில் போட்டி சமநிலையில் முடிய சமநிலை தவிர்ப்பு போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை 04:01 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அத்துடன் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில நாடக போட்டியும் யூன் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி முதலாமிடத்தையும் யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தையும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி ராகவி ரவீந்திரலிங்கம் அவர்கள் சிறந்த நடிகை விருதையும் பெற்றுக்கொண்டார்.