திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாக கர்தினால்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்பு நிகழ்வு 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் நடைபெற்றது.
வத்திக்கான் புனித பேதுருவானவர் பெருங்கோவில் வளாகத்தில் உரோம் நேரம் காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் திருத்தந்தை லியோ அவர்கள் திருத்தந்தையர் வாகனத்தில் மக்கள் நடுவே வலம்வந்து மக்களை வாழ்த்தினார்.
மக்கள் சந்திப்பு நிறைவில் திருவழிபாட்டுச் சடங்குகள் ஆரம்பமாகின. இவ்வழிபாடுகளை ஆரம்பிப்பதற்காக திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் கீழை வழிபாட்டுமுறை திருஅவையின் தந்தையர்களுடன் வத்திக்கான் பெருக்கோவிலுக்குள் சென்று திருஅவையின் முதல் திருத்தந்தையான திருத்தூதர் பேதுருவின் கல்லறையை தூபம் கொண்டு வணங்கி செபித்தார்.
தொடர்ந்து வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் பதவியேற்பு திருப்பலி இடம்பெற்றதுடன் இத்திருப்பலியில் ஆட்டுக்குட்டியின் கம்பளியால் செய்யப்பட்ட கழுத்துப்பட்டையும் மீனவர் மோதிரமும் புதிய திருத்தந்தைக்கு வழங்கப்பட்டன.
தொலைந்து போன ஆடுகளைத் தேடி கண்டுபிடித்து தனது தோள்களில் சுமந்து செல்லும் நல்லாயனைப்போல திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை இருப்பார் என்பதை அடையாளப்படுத்தும் முகமாக திருத்தந்தையின் கழுத்தில் தொங்கவிடப்பட்ட இக்கழுத்துப்பட்டையில் 6 கறுப்பு சிலுவைகளும் இயேசுவை சிலுவையில் அறைய உதவிய மூன்று ஆணிகளும் இணைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் தனது சகோதரர்களும் சீடர்களுமான பிறரை நம்பிக்கையில் உறுதிப்படுத்து என்று பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்ட பணியின் அடையாளமாக வழங்கப்பட்ட மீனவ மோதிரத்தின் மேற்பகுதியில் திருத்தூதர் பேதுருவின் உருவமும் பின்புறம் திருத்தந்தையின் இலச்சினையும் மோதிரத்தின் வளைவுப் பகுதியில் இலத்தீன் மொழியில் 14ஆம் லியோ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஏறக்குறைய 150 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக் கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.