மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதல் ஆயரும் ஒய்வுநிலை ஆயருமான பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்கள் 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தனது 73ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

மட்டக்களப்பு, தன்னாமுனையில் 1952ஆம் ஜப்பசி மாதம் 12ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை தன்னாமுனை புனித வளனார் பாடசாலையிலும் குருத்துவ கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் குருமடம் மற்றும் இந்தியா திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள புனித பவுல் குருமடத்திலும் பெற்றுக்கொண்டார்.

அத்துடன் திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருமடத்தில் மெய்யியலில் இளங்கலைமானி பட்டத்தையும் பூனே பாப்பிறை குருத்துவ கல்லூரியில் இறையியலில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

1980ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயித்தியமலை, புல்லுமலை, வாகரை, வீச்சுக்கல்முனை, தாண்டவன்வெளி பங்குகளின் பங்குத்தந்தையாகவும், மட்டக்களப்பு புனித வளனார் சிறிய குருமட அதிபராகவும், கண்டி அம்பிட்டிய தேசிய குருமட விவிலியப் பேராசிரியாராகவும் உருவாக்குனராகவும், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், மறைமாவட்ட குருமுதல்வராகவும் பணியாற்றினார்.

மேலும் இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டதாரியாக கலைப்பிரிவில் சித்தியெய்திய இவர் உயர்கல்விக்காக உரோமைக்கு சென்று 1993ஆம் ஆண்டில் விவிலிய இறையியலில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.

2008ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதி திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்ட இவர் 2008ஆம் ஆண்டு வைகாசி மாதம் 24ஆம் திகதி ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டு 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 23ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார்.

இவர் மறைமாவட்டத்தில் இறையியல் கல்லூரியினை உருவாக்கி பொதுநிலையினரும் இறையியல் கல்வியில் இளமானிப் பட்டத்தினைப்பெற பெரிதும் உழைத்ததுடன் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் கத்தோலிக்க கல்வி மறைக்கல்வி மற்றும் விவிலியத் திருத்தூதுப்பணி, நற்செய்தி அறிவிப்பு, திருவழிபாடு கலாசாரம் போன்ற ஆணைக்குழுக்களின் இணைத்தலைவராகவும், நிதிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் நல்லடக்க திருப்பலி 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மறைமாவட்ட அப்போஸ்தலிலக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத்திருப்பலியில் ஏனைய மறைமாவட்ட ஆயர்கள், குருக்கள், துறவிகள், இறைமக்களென பலரும் கலந்து ஆயர் அவர்களின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடினர்.

By admin