குமுதினி படுகொலையின் 40ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினிப் படகை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வழிமறித்து குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 36 பேரை மிகவும் கொடூரமானமுறையில் வெட்டி படுகொலை செய்தனர்.

திட்மிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலையை நினைவுகூர்ந்தும் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலிசெலுத்தியும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்திலுள்ள புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நினைவேந்தல் குழும தலைவர் விசுவலிங்கம் ருத்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நினைவேந்தல் நிகழ்வில் சர்வ மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இறந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

By admin