2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக கனடா நாட்டின் பிரம்டன் நகரில் நிர்மானிக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
பிரம்ரன் நகரின் சிங்கௌசி பொது பூங்காவில் “தமிழின அழிப்பு நினைவகம்” என்னும் பெயரில் உருக்கினால் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்நினைவுத்தூபியை கனடா மாநகர மேஜர் பற்றிக் பிறவுண் அவர்கள் திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் தழிழர்கள், தமிழ் ஆர்வலர்களென ஆயிரக்கணக்கானோர் கலந்து இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் உள்ளிட்ட கனடாவின் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் கட்டப்பட்ட இந்நினைவுச்சின்னம் தமிழ் மக்களின் பூர்வீக நிலப்பரப்புக்களை உள்ளடக்கிய தமிழீழ வரைபடத்தை கொண்டு, இலங்கை இராணுவத்தினால் ஈழத்தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை உலகிற்கு கூறும் வரலாற்று அடையாளமாக நிறுவப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.