திரு அவையின் புதிய திருத்தந்தையாக கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட் அவர்கள் கான்கிளேவ் அவையின் விதிமுறைகள் மற்றும் Universi Dominici Gregis என்ற அப்போஸ்தலிக்க சட்ட அமைப்பின் விதிமுறைகளின்படி மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற்று 08ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அகுஸ்தீன் சபையைச் சேர்ந்த முதல் திருத்தந்தை என்னும் புகழ் பெற்ற இவர் பதினான்காம் லியோ என்னும் பெயரினை ஏற்றுள்ளதுடன் திருஅவையை பொறுப்பேற்கும் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த இரண்டாவது திருத்தந்தையாகவும் உள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வடக்குப் பகுதியில் பிறந்து தெற்கில் பணியாற்றிய பெருமைக்குரிய இவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், திருப்பீட ஆயர்பேரவைக்கான தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
1955ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14ஆம் திகதி சிகாகோவிலுள்ள இல்லினோய்ஸ் என்னுமிடத்தில் பிறந்த இவர் தனது குழந்தைப் பருவத்தையும், இளமைப் பருவத்தையும் அமெரிக்காவில் கழித்து புனித அகுஸ்தீன் சபையின் சிறியகுருமடத்தில் இணைந்தார்.
தொடர்ந்து பென்சில்வேனியாவில் உள்ள வில்லானோவா பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று 1977ஆம் ஆண்டு அப்பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் தத்துவ இயலிலும் பட்டம்பெற்றார்.
அதே ஆண்டு புரட்டாதி மாதம் 1ஆம் திகதி சிகாகோவின் செயிண்ட் லூயிஸில் உள்ள அகுஸ்தீன் (OSA) துறவற இல்லத்தில் இணைந்து துறவற பயிற்சி பெற்று 1978-ஆம் ஆண்டு தனது முதல் வார்த்தைப்பாட்டையும், 1981ஆம் ஆண்டு தனது நிரந்தர வார்த்தைப்பாட்டையும் நிறைவேற்றினார்.
பின்னர் சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் இறையியலில் பட்டம்பெற்ற இவர், தனது 27ஆவது வயதில் உரோமில் உள்ள ஆஞ்சலிக்கம் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திருஅவைச் சட்டம் பயில்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
1982ஆம் ஆண்டு ஆனி மாதம் 19ஆம் திகதி சாந்தா மோனிகாவின் அகுஸ்தினியானோ கல்லூரியில் பேராயர் Jean Jadot அவர்களால் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
1984ஆம் ஆண்டு தனது முதுகலைக் கல்வியை நிறைவுசெய்து 1985ஆம் ஆண்டு தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும்போது, பெருவின் பியூராவில் உள்ள சுலுகானாஸிற்கு அகுஸ்தீன் சபை மறைப்பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். 1987ஆம் ஆண்டில், தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்த இவர், இல்லினோய்ஸின் ஒலிம்பியா ஃபீல்ட்ஸில் உள்ள “நல் ஆலோசனை அன்னை” என்ற அகஸ்டினியன் மறைமாநிலத்தின் இறைஅழைத்தல் இயக்குநராகவும், மறைப்பணி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
1999ஆம் ஆண்டில் சிகாகோவின் அகுஸ்தீன் சபை மறைமாநில தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அகுஸ்தீன் சபைத்தலைவராக முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் 2007 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு தனது சிகாகோ மறைமாநிலத்திற்குத் திரும்பி, சபையின் முதல் ஆலோசகர், இறைஅழைத்தல் இயக்குநர் என பல பொறுப்புக்களை ஏற்றார்.
2014ஆம் ஆண்டு கார்த்திகை 3ஆம் திகதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பெருவின் சிக்லாயோ மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், அதே நேரத்தில் சுஃபார் மறைமாவட்டத்தின் பட்டம்சார் ஆயராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு மார்கழி 12ஆம் திகதி குவாடலூப்பே அன்னை பேராலயத்தில் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
2015 செப்டம்பர் 26, அன்று, சிக்லாயோ மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2018 பங்குனி மாதம் பெரு மறைமாவட்ட ஆயர் மாநாட்டின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் அதில் அவர் பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராகவும் கலாச்சாரம் மற்றும் கல்வி ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

By admin