இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிற்சங்கங்கள், வெகுஜன சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த மே தின பேரணி 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமாகிய இப்பேரணி கஸ்தூரியார் வீதி, ஸ்டான்லி வீதி, காங்கேசன்துறை வீதி, பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை வந்தடைந்தது அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக இறைமை, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வழங்கு, இனப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டமிட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புக்களை நிறுத்து, மலையக மக்களின் கல்வி அபிவிருத்திக்கான செயற்பாடுகளை துரிதப்படுத்து, பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்கு, தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானத்தின் ஊடாக விடுதலை செய், கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்து, அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டின் 2ஃ3 சம்பள படி நிலையை வழங்கு, சகல பாடசாலை மாணவர்களுக்குமான போசாக்கு நிலையை உறுதிப்படுத்து போன்ற கோசங்கள் இப்பேரணியில் எழுப்பப்பட்டன.
இப்பேரணியில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிற்சங்க தலைவர்கள், அதிபர்கள், ஆசிரியர்களென 500 வரையானவர்கள் பங்குபற்றியிருந்ததுடன் இப்பேரணியில், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பனவும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.