யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவ முதல்வர் சபை மற்றும் யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி உள்ளக பயிற்சிநெறி ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த போதை ஒழிப்பு வார சிறப்பு நிகழ்வு பங்குனி மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வுகள் 06ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் போதைஒழிப்பு தொடர்பான கலைநிகழ்வுகள் அறிவூட்டல் செயற்பாடுகள் என்பவற்றுடன் போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப்போட்டி, பாடல் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் பரிசளிப்பும் இடம்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வாக யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ். திருக்குடும்ப கன்னியர் மட மாணவர்களுக்கிடையிலான விவாத அரங்கும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் லண்டன் One Child Foundation அமைப்பின் தலைவர் திரு. ஜோசப் மனுவல்பிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருமதி. சுகு மனுவல்பிள்ளை மற்றும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. மகாலிங்கம் நிரேஸ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

