தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி குரலற்றோரின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘விடுதலை’ கவனயீர்ப்பு போராட்டம் 24ஆம், 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரணை வளைவு முன்பாக ஆரம்பமாகிய இப்பேரணி யாழ். கிட்டு பூங்காவை சென்றடைந்து அங்கு சிறைவாழ்க்கை கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் சித்திர காட்சிப்படுத்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள விடுதலை விருட்சத்திற்கான விடுதலை நீர் சேகரிப்பு, தமிழ் அரசியல் கைதியாக 15 வருடங்கள் சிறையிலிருந்த விவேகானந்தனூர் சதீஸ் அவர்கள் எழுதிய “துருவேறும் கை விலங்கு” நூல் அறிமுகம் என்பன இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவும் தயாரித்து வழங்கப்பட்டது.
இப்பேரணியில் மதத்தலைவர்கள், அருட்சகோதரிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.