450 ஆண்டு கால வரலாற்றை கொண்ட மன்னார் விடத்தில் தீவின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, சமய, கலை, கட்டடக்கலை, இலக்கியம், விவசாயம், சுகாதாரம், சுற்றுசூழல், விளையாட்டு போன்றவற்றை ஆய்வுசெய்து ஆவணப்படுத்தி மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விடத்தல்தீவு பன்னாட்டு மாநாடு யூலை மாதம் 11, 12ஆம் திகதிகளில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா பல்கலைக்கழக பேராசிரியரும் விடத்தல்தீவு பன்னாட்டு மாநாட்டின் தலைவருமான கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன்; அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் நாளன்று வவுனியா பல்கலைக்கழக வேந்தர் திரு. சுப்ரமணியம் மோகனதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்புரைகள், கருத்துரைகள், குழு விவாதங்கள், கலாச்சார நிகழ்வுகள் என்பவற்றுடன் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.

தொடர்ந்து 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்துகொண்டதுடன் இந்நிகழ்வில் நடனம், பாடல், கோலாட்டம், தாளலயம், வில்லுப்பாட்டு, பாவோதல், இசை நிகழ்வுகள், கிராமிய நடனம் பழைய நாட்டுப்புற நாடகம், சைவ நடனம், ஆங்கில நாடக நடனம், நாட்டுக்கூத்து, இஸ்லாமிய நடனம், கவிதை, கராத்தே தற்காப்பு கலைநிகழ்வு போன்றவற்றுடன் நெட்வேர்க்கிங் மற்றம் முறைசார கலந்துரையாடலும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பன்னாடுகளில் வாழும் விடத்தல்தீவு மக்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin