வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் விசேட தேவையுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கௌரவிப்பு மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் ஆரோபண இளைஞர் இல்லத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு, பூநகரி, கண்டாவளை, பரந்தன் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிள்ளைகளுக்கான கௌரவிப்பு, கலைநிகழ்வுகள், ஆவண தொகுப்பு வெளியீடு, தன்னார்வ தொண்டர்களுக்கான கௌரவிப்பு, பிள்ளைகளுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நாளாயினி இன்பராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அனைத்துலக மருத்துவ அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் திரு கிருஸ்ணகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஒளிரும் வாழ்வு நிறுவன இயக்குனர் திரு. அம்பிகைபாலன், அனைத்துலக மருத்துவ அமைப்பின் வட மாகாண திட்ட இணைப்பாளார் திரு துஸ்யந்தன், ஆரோபண இயக்குனர் அருட்தந்தை சசிகரன் மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகள் உட்பட 150ற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

By admin