இலங்கை நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை மதங்களை இணைத்து முன்னெடுத்த சர்வமத மாநாடு ஐப்பசி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
“தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள்” எனும் கருப்பொருளில் பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்புரைகள், மாநாட்டு நூல் வெளியீடு, மாநாட்டு தீர்மான பிரகடணம், மத ரீதியான கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா அவர்கள் பிரதம உரையாளராக கலந்து உரையாற்றியதுடன் யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பொன்னுத்துரை சந்திரசேகரன் அவர்களால் இந்து சமயம் தொடர்பாகவும், தமிழ்நாடு மங்கள புத்தவிகாரை தலைமை தேரர் சன்னஸ்கம இந்தரதன தேரர் அவர்களால் பௌத்த சமயம் தொடர்பாகவும் பேருவளை இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதியும் விரிவுரையாளருமான அஷ். ஷேக் பலீல் – நளீமி அவர்களால் இஸ்லாமிய சமயம் தொடர்பாகவும் ஆன்மீக உளவளதுணையாளர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களால் கிறிஸ்தவ சமயம் தொடர்பாகவும் சிறப்புரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் துர்க்காபுரி தேவஸ்தானம் மற்றும் சிவபூமி தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறுதிருமுருகன், நாகவிகாரை பிரதம குரு மீஹாஹயண்துரை சிறிவிமல தேரர், இமாம் சிவலப்பள்ளி காஷ்மி மௌலவி அல்ஹாபிழ். ஏ.எம். றழீம் – மக்கி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்; யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், சிவசேனை தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன், நாகவிகாரை உப பிரதம குரு கொங்கால சிறி தர்ம தேரர், அங்கிலிக்கன் திருச்சபை குருமுதல்வர் அருட்தந்தை செல்வன், இமாம் சிவலப்பள்ளி காஷ்மி மௌலவி அப்துல் அஸீஸ் – காஸிமி மற்றும் தேசிய சமாதான பேரவை தலைவர் திரு. ஜெகான் பெரேரா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.