இலங்கை நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை மதங்களை இணைத்து சர்வமத மாநாடு ஒன்றை நடாத்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக பேரவை அங்கத்தவர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் புரட்டாதி மாதம் 3ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

“தேசிய ஒற்றுமையை நோக்கி நம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள்” எனும் கருப்பொருளில் வரும் ஐப்பசி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை காலை 9மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் இம்மாநாட்டை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டடுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வடக்கில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் யாழ். வருகை தொடர்பாகவும் இவ்ஊடக சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டபோது இவர்கள் தமது கருத்துக்களையும் வழங்கியிருந்தனர்.

இச்சந்திப்பில் உரையாற்றிய யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் கச்சதீவை தரிசித்தது கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது அதை யாரும் உரிமை கோர முடியாது என்பதை வலியுறுத்துவதாக அமைந்ததுடன் கச்சதீவை சுற்றுலா தலமாக மாற்றுவது பற்றிய ஜனாதிபதியின் கருத்தின் அடிப்படையில் கச்சதீவு சுற்றுலா தலமாக மாற்றப்பட்டால் அதன் புனிதத்துவம் பாதுகாக்கப்படாதெனவும் அப்புனிததுவத்துக்கு குந்தகம் ஏற்படாதவாறு இச்செயற்பாடுகள் அமையவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கச்சதீவு யாழ். மறைமாவட்டத்தின் கீழ் உள்ளதால் இது தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் யாழ் மறைமாவட்டத்தோடு கலந்துரையாடுவார் எனவும் தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், இணைத்தலைவர்கள் அருட்தந்தை ஜெபரட்ணம், நாக விகாரை விமலதேரர், ரலீம் மௌலவி மற்றும் இரண்டு பேரவை அங்கத்தவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

 

By admin