யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த ஒன்றுகூடலும் திருமண வாழ்வில் இணைந்து வெள்ளிவிழா காணும் தம்பதிகளுக்கான கௌரவிப்பும் யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கழக அங்கத்தவர்களும் தம்பதிகளும் புனித யூபிலி கதவினூடாக பேராலயத்திற்குள் நுழைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டில் பங்குபற்றினர்.
நற்கருணை வழிபாட்டை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து தம்பதிகள் பாண்ட் வாத்தியத்துடன் பேராலய மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு கொடியேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க நிகழ்வுகளில் கலைநிகழ்வுகளும் திருமண வாழ்வில் இணைந்து வெள்ளிவிழா காணும் 83 தம்பதிகளுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், கழக அங்கத்தவர்கள், தம்பதியினரென 300ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.