யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக “நித்தமும் நினைந்திட” திரு இசை நூல் வெளியீடு இடம்பெற்றது. 800 பாடல்களை உள்ளடக்கிய “நித்தமும் நினைந்திட” திரு இசை நூலை மறைமாவட்ட ஆயர் அவர்கள் வெளியிட்டுவைத்தார்.

தொடர்ந்து, நற்கருணை நம்பிக்கையின் மறைபொருள், நற்கருணை ஒரு கொண்டாட்டம் என்னும் தலைப்புக்களில் வழிபாட்டு மாநாட்டிற்கான சிறப்புரைகளை திருகோணமலை மறைமாவட்ட அருட்தந்தை நவரெட்ணம் அவர்கள் வழங்கினார். சிறப்புரைகளின் நிறைவில் குழு ஆய்வும் கலந்துரையாடலும் இடம்பெற்று அது தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன் வருகின்ற புரட்டாதி மாதம் கண்டி மறைமாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய திருவழிபாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளோருக்கான தெரிவும் இடம்பெற்றது. நிறைவில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களால் தொகுப்புரை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மறைமாவட்ட மறைக்கோட்ட முதல்வர்கள், மறைக்கோட்டங்களின் திருவழிபாட்டு இணைப்பாளர்கள், அருட்சகோதரிகள், மறைக்கோட்ட பிரதிநிதிகளென 60 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட “நித்தமும் நினைந்திட” திரு இசை நூல் தயாரிப்பதற்கான ஆயத்த செயற்பாடுகள் திருவழிபாட்டு ஆணைக்குழுவின் முன்னைநாள் இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் காலத்தில் ஆரம்பமாகி தற்போதைய இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் காலத்தில் நிறைவடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin