யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படவுள்ள சமூகதொடர்பு ஆண்டின் அங்குரார்ப்பண நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
சமூக தொடர்பாடலினூடாக அமைதியின் ஆண்டை உருவாக்குவோம் என்னும் கருப்பொருளில் இவ்வருடம் யாழ். மறைமாவட்டத்தில் இவ் ஆண்டு சிறப்பிக்கப்படவுள்ளது.
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் அன்றைய தினம் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புதிய ஆண்டு அங்குரார்ப்பணம் செய்யப்படும் அதே வேளையில் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் இடம்பெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 12ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குருக்களுக்கான சமூக தொடர்பு ஆண்டு சிறப்பு கருத்தமர்வும் நடைபெறவுள்ளது.
யாழ். மறைமாவட்ட அச்சு ஊடகமான பாதுகாவலன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதன் 150வது ஆண்டாக இவ்வருடம் அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

