யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கார்த்திகை மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து குருமட கேட்போர் கூடத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
கலைநிகழ்வில் குருமட மாணவர்களின் படைப்பான “தேன் அரும்பு” கையெழுத்து நூலின் 17ஆவது இதழ் ஆயர் அவர்களால் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் இதழுக்கான மதிப்பீட்டுரையை திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனரும் யாழ்ப்பாண கல்விவலய நாடகமும் அரங்கியலும் பாடா ஆசிரிய ஆலோசகருமான திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களால் வழங்கப்பட்டதுடன் அதிபர் அவர்களால் வருடாந்த அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
அத்துடன் அன்றைய நாளை சிறப்பித்து அன்று மாலை விளையாட்டு நிகழ்வுகள் அங்கு நடைபெற்றதுடன் இந்நிகழ்வுகளில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், குருமட மாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். மறைமாவட்டத்தின் இதயமாக விளங்கும் 156 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்குருமடம் தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றிய இன்னும் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆயர்களையும் ஆயிரக்கணக்கான குருக்களையும் உருவாக்கிவருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

