யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா யூலை மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி முகாமையாளர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2024ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சட்டத்தரணி திரு. மரியதாஸ் யூட் டினேஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அத்துடன் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு நிறைவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட நினைவுத்தபால் முத்திரை வெளியீட்டுடன் இணைந்த கலாச்சார நிகழ்வும் யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி உப அதிபர் அருட்தந்தை மகன் அலோசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் பாடசாலை கொடியேற்றப்பட்டு தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ்அரங்க நிகழ்வுகளில் கல்லூரியின் பாதுகாவலர் புனித பத்திரிசியாரின் படத்துடன் கூடிய அஞ்சல் நினைவு முத்திரையும் சிறப்பு முதல்நாள் உறையும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
அஞ்சல் நினைவு முத்திரை மற்றும் சிறப்பு முதல்நாள் உறையை ஆயர் அவர்கள் வெளியிட்டுவைக்க முதற்பிரதியை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. பிரதீபன் அவர்கள் பெற்றுக்கொண்டதுடன் சிறப்பு நிகழ்வாக மாணவர்களால் நாட்டிய நடனமும் மேடையேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், அசிரியர்கள், ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.