யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். புனித மரியன்னை பேராலய பங்குமக்களால் ஆற்றுகை செய்யப்பட்ட “யாழ்ப்பாண மறைசாட்சிகள்” கூத்திசை நாடகம் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அரங்கிலும் அரங்க பின்ணணியிலும் 25ற்கும் அதிகமான கலைஞர்களின் பங்குபற்றுதலோடு ஆற்றுகை செய்யப்பட்ட இந்நாடகத்தை அருட்தந்தை பாலதாஸ் பிறாயன் அவர்கள் எழுதியதுடன் அண்ணாவியார் அன்று யூலியஸ் மற்றும் பேராலய உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் டியோனி ஆகியோர் இணைந்து நெறியாள்கை செய்திருந்தனர்.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள், அயற் பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
ஒல்லாந்தர் ஆட்சியில் யாழ்ப்பாண இராச்சிய கத்தோலிக்கர் எதிர்நோக்கிய துன்பங்களையும் இலங்கை நாட்டிற்கு வருகைதந்த புனித யோசேவாஸ் அடிகளாரின் பணியையும் டொன் பேதுருவின் கிறிஸ்தவ விசுசாவத்தை வெளிப்படுத்தும் மறைசாட்சியத்தையும் சித்தரிப்பதாக இந்நாடகம் அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.