அளம்பில் சுவாமி தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மொன்போர்ட் அருட்சகோதரர்களின் மொண்பேர்ட் இல்ல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
இலங்கை மொன்போர்ட் துறவற சபை முதல்வரும் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்போர்ட் சர்வதேச பாடசாலை அதிபருமான அருட்சகோதரன் மரியபிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து இல்லத்தை ஆசீர்வதிக்க உரோம் நாட்டிலுள்ள மொன்பேர்ட் அருட்சகோதரர்களின் உதவி தலைவர் அருட்சகோதரர் தனராஜ் அவர்கள் இல்லத்தை திறந்துவைத்தார்.
சபையின் இந்தியா திருச்சி மாகாண முதல்வர் அருட்சகோதரர் ஜோன் பிறிட்டோ அவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.
இந்தியாவிலிருந்து வருகைதந்து தீவகம் அல்லைப்பிட்டிப் பிரதேசத்தில் சர்வதேச பாடசாலையொன்றை அமைத்து கல்விப் பணியாற்றிவரும் மொன்போர்ட் அருட்சகோதர்கள் தங்களின் பணிகளை முல்லைத்தீவில் விரிவாக்கும் நோக்கில் “மொன்போர்ட் இல்லத்தை” அமைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

