மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் அனுசரணையில் காத்தான்குளம் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் மன்னார் மறைமாவட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 13,14ஆம் திகதிகளில் காத்தான்குடி புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றன.
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்போட்டியில் மன்னார் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 12 ஆண்கள் அணிகளும் 04 பெண்கள் அணிகளும் பங்குபற்றியதுடன் பெண்களுக்கிடையிலான போட்டியில் கீரியன் குடியிருப்பு பங்கு இளையோர் ஒன்றிய அணியும் ஆண்களுக்கிடையிலான போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் இளையோர் ஒன்றிய அணியும் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டன.
இப்போட்டியின் முதல்நாள் நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களும் இரண்டாம்நாள் நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களும் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டிகள் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.