மாரீசன்கூடல் பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சிரமதானம், மரநடுகை, திரைப்படக் காட்சிப்படுத்தல், சந்தை, ஆக்கத்திறன் செயற்பாடுகள் மற்றும் திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதி நாளான செப்டெம்பர் 27ஆம் திகதி, சேந்தாகுளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான குழுச் செயற்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
திருவுளப்பணியாளர் சபை அருட்தந்தை பிறாங் டவ் அவர்கள் பிரதம விருந்தினராகவும், ஊறணி பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்களான திருமதி ஜீன் மற்றும் திருமதி அக்கினேஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் 150 மாணவர்களும் 25 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர். இதற்கான நிதியுதவியை ஆலய மக்களும் கரித்தாஸ் கியூடெக் நிறுவனமும் வழங்கியிருந்தன.
இதன் தொடர்ச்சியாக, தரம் 06 முதல் 11 வரையான மறைக்கல்வி மாணவர்களுக்கான கள அனுபவப் பயணம் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போது சுமார் 70 மாணவர்களும் மறையாசிரியர்களும் திருகோணமலை மாவட்டத்திற்குச் சென்று அங்குள்ள பிரசித்திபெற்ற இடங்களையும் ஆலயங்களையும் பார்வையிட்டனர்.
அதேவேளை, தரம் 01 முதல் 05 வரையான மாணவர்களுக்கான கள அனுபவப் பயணம் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுமார் 53 மாணவர்களும் மறையாசிரியர்களும் பங்கேற்றனர்.
இதன்போது யாழ். புனித மரியன்னை பேராலயம், சிவபூமி, பழைய பூங்கா, யாழ்ப்பாணம் கோட்டை, யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களைப் பார்வையிட்டனர். அத்துடன், ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஓய்வுநிலை குருக்கள் இல்லத்திற்குச் சென்று, ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

