மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலய ஞானப்பிரகாசர் கலையரங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளவாலை மறைக்கோட்ட பங்குகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் முப்பொன் விழாவை முன்னிட்டு பங்கு மறையாசிரியர்களால் மறைக்கோட்ட பங்கு மறைக்கல்வி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வினாவிடை போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் உருவச்சிலைக்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் மாலை அணிவிக்க, சுவாமியின் உருவப்படத்திற்கு அவரால் திருமுழுக்கு கொடுக்கப்பட்டு பெயர்சூட்டப்பட்ட அப்பங்கைசேர்ந்த தாயார் ஒருவரால் மாலையணிவிக்கப்பட்டதுடன் சுவாமி ஞானப்பிரகாசரின் நினைவை தாங்கி பங்குத்தந்தையால் எழுதப்பட்டு திரு. ஜேசுதாஸ் அவர்களின் இசையமைப்பில் மல்வம் திருக்குடும்ப ஆலய பாடகர் குழாமினரால் பாடப்பட்ட அஞ்சலி பாடல் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து கலைநிகழ்வுகளும் கௌரவிப்புக்களும் இடம்பெற்றன. கௌரவிப்பு நிகழ்வில் முப்பொன் விழாவை முன்னிட்டு பங்கு மறையாசிரியர்களால் மறைக்கோட்ட பங்கு மறைக்கல்வி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வினாவிடை போட்டியில் முதலிடம்பெற்ற 143 மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்படதுடன் கலைநிகழ்வுகளில் கிராமிய நடனம், நடனங்கள், பேச்சு, வில்லுப்பாட்டு போனறவற்றுடன் சிறப்பு நிகழ்வான ஞானப்பிரகாசரின் வாழ்வை சித்தரிக்கும் உரை நடை சித்திர நாடகமும் மேடையேற்றப்பட்டது.
இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ், கிளறேசியன் சபை கிளாரட் சிறுவர் கதம்ப இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை அன்புராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள், மறைக்கோட்ட பங்கு பிரதிநிதிகளென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

