யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட குடும்ப பொதுநிலையினர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமண பந்தத்தில் இணைந்து 25, 50 வருடங்களை நிறைவுசெய்த தம்பதிகள், மற்றும் பங்குகளில் 25 வருடங்களுக்கு மேல் இறைபணி செய்த பொதுநிலை பணியாளர்கள் மற்றும் இவ்வருடம் 25,50,75 வருட பிறந்ததினத்தை கொண்டாடியவர்களுக்கான கௌரவிப்புக்களும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்துடன் இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் விருந்தினராக கலந்து குடும்ப வாழ்வு பற்றி சிறப்புரையாற்றினார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென 1500ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.