மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஆவணி மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஆயர் அவர்கள் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் மன்னார் பொதுவைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரவேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினார்.
இவற்றை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் இப்பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடனும் மக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி இவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென உறுதிமொழி வழங்கியுள்ளாதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்.