மன்னார் மறைமாவட்டம் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு புரட்டாதி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்ப பணியகத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்த 11 மாணவர்களுக்கு இளம் கலைமாணி பட்டமும் 18 மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா சான்றிதழும் கல்லூரியில் 6 மாத கால சிங்கள ஆங்கில கற்கைநெறியை நிறைவுசெய்த 40 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.