மன்னார் படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பெல்வில் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டின் மன்னார் மாவட்ட அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலியும் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றன.

நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியுடன் நினைவுரைகள், கருத்துப் பகிர்வுகள், அருட்தந்தை அன்புராசா அவர்களின் 84, 85 மன்னார் படுகொலைகள் சொல்வதென்ன நூல் அறிமுகம் என்பன நடைபெற்றன.

1984ஆம் ஆண்டு மார்கழி மாதம் 04ஆம் திகதி மன்னார் முருங்கன் பிரதான வீதி 11ஆம் கட்டை சந்திக்கருகாமையில் இடம்பெற்ற நிலக்கண்ணி வெடித்தாக்குதலை தொடர்ந்து, வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள், வவுனியாவுக்கும் மன்னாருக்கும் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள், வயல்களில் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள், முருங்கன் அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த அரச ஊழியர்கள், பிரதான வீதியின் அருகே வீடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் எனக் கண்ணில்பட்ட சுமார் 200 வரையானவர்களை அங்கு வந்த இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப்படுகொலை செய்தனர்.

இப்படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதாக அருட்தந்தை அன்புராசா அவர்களின் நூல் அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin