வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் யாராவது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஆலய செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படுவார்களென கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தை மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இடம்பெற்ற ஞாயிறு திருப்பலி நிறைவில் மேற்கண்டவாறு தெரிவித்த அருட்தந்தை வசந்தன் அவர்கள் எமது தமிழ் இனம் திட்டமிட்டு போதைப்பொருளால் அழிக்கப்படுகின்றதெனவும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் எமது இனத்தை மீட்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோமெனவும் எடுத்துரைத்தார்.
தற்போது வட கிழக்கில் குறிப்பாக வடமராட்சி கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும்நிலையில் வடமராட்சி கிழக்கு கடலில் அதிகளவான போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றதெனவும் இதனால் சிறுவர் தொடக்கம் பெரியவர் வரை பாதிக்கப்படுகின்றார்களெனவும் குறிப்பிட்ட அருட்தந்தை போதைப்பொருளை கடத்தி குடும்பங்களை சீரழிக்கும் இந்த கொடூரமான செயற்பாடுகளில் இருந்து விடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை போன்ற குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டு ஆலய செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படுபவர்கள் தமது குற்றங்களுக்காக மனம்வருந்தி திருயாத்திரை மேற்கொண்டு பாவசங்கீர்த்தன அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் ஆலய செயற்பாடுகளில் இணைத்துக்கௌ;ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
