இலங்கை மறைமாவட்டங்களில் இயங்கும் புனித யோசேவ்வாஸ் இறையியல் கல்லூரிகளில் கல்வி பயின்று கிறிஸ்தவ கற்கைநெறியில் கலைமானி பட்டப்படிப்பை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு உயர் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
கொழும்பு புனித யோசேவ்வாஸ் இறையியல் கல்லூரி பீடாதிபதி மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த 11 மாணவர்கள் மற்றும் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த 11 மாணவர்கள் உட்பட 87 மாணவர்கள் கலைமானி பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.
ஊர்பானியானா பல்கலைக்கழக அங்கீகரம்பெற்ற இக்கற்கைநெறியில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் இயங்கும் யோசேவ்வாஸ் இறையியல் கல்லூரி மாணவி திருமதி பிறிம்ஸ் யுரேக்கா அவர்கள் தேசிய ரீதியில் இரண்டாவது அதிஉயர் புள்ளியை பெற்று யாழ். மறைமாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
யாழ். மறைமாவட்டத்தில் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் கீழ் இயங்கும் புனித யோசேவ்வாஸ் இறையியல் கல்லூரியின் வளர்ச்சியில் கல்லூரியின் முன்னைநாள் இயக்குநர்களான அருட்தந்தை ரவிச்சந்திரன், ஜெயறஞ்சன், ரவிராஜ் மற்றும் தற்போதைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் ஆகியோரின் வழிநடத்தலும் விரிவுரையாளர்களான மறைமாவட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பொதுநிலையினரின் ஒத்துழைப்பும் பெரும் பங்காற்றியுள்ளன.