அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு பங்கில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் உருவப்படத்திற்கு அவருடைய தந்தை திருச்செல்வம் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைக்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து நினைவுரைகளும் அருட்தந்தைக்கான அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தீவகம், அல்லைப்பிட்டி பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்படட மக்களுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது 2006ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20ஆம் திகதி இராணுவத்தால் வலிந்து காணாமலாக்கப்பட்டார்.
அவருடன் சேர்ந்து பயணித்த திரு. வின்சன் விமலதாஸ் அவர்களும் அருட்தந்தையுடன் காணாமல் ஆக்கப்பட்டதுடன் இவர்களை பற்றிய உண்மையான தகவல்கள் இதுவரை வெளிவராமல் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.