தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடல் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் சட்டத்தரணி திரு. K.S. இரத்தினவேல், ஜனாதிபதி சட்டத்தரணி திரு. V. புவிதரன் பேராசிரியர் A. சர்வேஸ்வரன், சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா, சட்டத்தரணி V.S. நிறஞ்சன், சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ், சட்டத்தரணி மரியதாஸ் யூட் டினேஸ் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்டும் நோக்கில் தமிழ் மக்களின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற அபிலாi~களை உள்ளடக்கிய சமஸ்டி முறையிலான அரசியலமைப்பொன்றே அவசியமானது எனும் பொதுத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறான சமஸ்டி முறையிலான அரசியலமைப்புக்கான சமூக ஒப்பந்தத்தமொன்றை தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் மேற்கொள்வதற்கான வரைபை தயாரித்தல்: புதிய அரசியலமைப்பினுள் உள்ளடக்கப்பட வேண்டிய சமஸ்டிக்கான அடிப்படை அம்சங்கனை உள்ளடக்கிய விரிவான அரசியலமைப்பு வரைபை தயாரித்தல்: பங்குபற்றிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிப் பிரதிநிதிகளும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேற்குறித்த உடன்பட்ட விடயங்களில் தொடர்ந்து ஒன்றாகச் செயற்படுதல்: சந்திப்பு இடம்பெற்ற திகதியிலிருந்து இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான எந்தவெரு கலந்துரையாடல்களிலும் தனித்தோ, கட்சி அடிப்படையிலோ ஈடுபடுவதில்லை போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் மேற்குறித்த இணக்கப்பாடுகளுக்கமைவாகத் தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கும், தமிழ் அரசியல்கட்சிகளுக்கும் இடையிலான அரசியலமைப்பு தொடர்பான செயற்பாடுகள் பல கட்டங்களாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.

