நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய திருவிழா சிறப்பு நிகழ்வாக சென் மேரிஸ் சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட கலைவிழா ஆவணி மாதம் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை சென். மேரிஸ் முத்தமிழ் கலையரங்கில் நடைபெற்றது.
சனசமூக நிலைய கலைப்பொறுப்பாளர் திரு. யுனிற்றன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உப தலைவர் திரு. பவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடல், கிட்டார் வாத்திய இசைநிகழ்வு, சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்களின் நகைச்சுவை நாடகம் என்பவற்றுடன் அண்ணாவியார் அவுறாம்பிள்ளை ரகு மற்றும் இளம்கலைஞர் சகாயதாசன் டெனிக்சன் ஆகியோரின் நெறியாள்கையில் “விசய மனோகரன்” தென்மோடி நாட்டுக்கூத்தும் சிறப்பு நிகழ்வாக மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும், அன்னை கடல் உணவு வாணிப உரிமையாளர் திரு. செபஸ்ரியாம்பிள்ளை அமலதாஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் நாவாந்துறை உதவி பங்குத்தந்தை அருட்தந்தை டினுஸன் பொன்ராசா, நாவாந்துறை நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரி அனி, யாழ். மாநகர சபை உறுப்பினர் திரு. அன்ரனி அன்ரன் சார்ல்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.