நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர், ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்குபின் நல்லை ஆதீனத்தின் குருமுதல்வராக பணியாற்றிவந்த இவர் யுத்த காலத்தில் தன்னாலான பணிகளைச் சிறப்பாக ஆற்றியதுடன் யாழ். மாவட்ட சர்வமத பேரவை அங்கத்தவராகவும் பணிபுரிந்தார்.

சுவாமி அவர்கள் எல்லா மதத்தினருடனும் அன்பாக பழகி மதம் கடந்து மனித நேயத்தையும் மாண்பையும் அதிகமாக நேசித்து அனைத்து மக்களாலும் விரும்பப்படுபவராகவும் போற்றப்படுபவராகவும் தனது எளிமையான வாழ்வை வாழ்ந்திருந்தார்.

சுவாமிகளின் திருவுடல் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு கொண்டுவரப்பட்டு பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு திருவுடல் ஊர்வலமாக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரியைகள் நடைபெற்றன.

அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள், பொதுமக்களென பலரும் கலந்து சுவாமிகளின் ஆன்ம ஈடேத்தற்றிக்காக செபித்தனர்.

அத்துடன் சிறந்த மனிதநேயப் பண்பாளரான இவர் ஈழத்தமிழர் வாழும் தேசந்தோறும் பல மாநாடுகளில் பங்குபற்றி மத விழுமியங்களோடு சமூக விழுமியங்களையும் பரப்பிய பெருமைக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin