நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ். தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முப்பொன்விழா நினைவு மலர் வெளியீடு பங்குனி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆசிரிய ஆலோசகர் திரு. யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள அமலமரித்தியாகிகளின் மாகாண இல்லமாகிய தொடர்பகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலாசிரியர் அமலமரத்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்கள் நூலை வெளியிட்டுவைத்தார்.
இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகளின் யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் ஆசியுரையை வழங்கியதுடன், சுவாமி ஞானப்பிரகாசரின் முப்பொன் விழாகுழு இணைத்தலைவரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமாகிய சிரேஸ்ட பேராசிரியர் திரு வேல்நம்பி மற்றும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் ஆகியோர் வாழ்த்துரைகளையும் வழங்கியிருந்தனர்.

